×

ஒன்றிய அரசின் இடையூறுகளை மீறி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறார்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பாராட்டு

சிவகங்கை: ஒன்றிய அரசு பல இடையூறுகளை கொடுத்தாலும் அதையும் மீறி முதல்வர் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் சிவகங்கையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது : ஒன்றிய அரசு பல இடையூறுகளை கொடுத்தாலும் அதையும் மீறி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், படிக்கும் பெண்களுக்கு ரூ.1,000 போன்ற நல்ல பல திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தியும் வருகிறார்.

தமிழகத்தில் நல்ல முறையில் ஆட்சி நடைபெறுகிறது. கிராமங்களிலும், நகரங்களிலும் வரியை உயர்த்த வேண்டும். அப்போதுதான் நகர ஊராட்சி மேம்பாட்டிற்கு நிதி அளிக்க முடியும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புதான் சொத்து வரி உயர்வதற்கு காரணம். பெட்ரோல், டீசல் விலையை அளவுக்கு மீறி ஒன்றிய அரசு உயர்த்தி கொண்டே இருக்கிறது. அதிக லாபம் சம்பாதிக்கலாம் என நினைக்காமல் பெட்ரோல் விலையை ஒரு அளவுக்கு மேல் உயர்த்த கூடாது என்ற உறுதியை ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும்.

தமிழக அரசுதான் லிட்டருக்கு ரூ.3 வரை பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது. மோடி, அமித்ஷாவின் பேச்சு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, ஒரே விதமான சாப்பாடு என்ற அடிப்படையில் உள்ளது. இவர்கள் இப்படியே பேசி அதை செயல்படுத்த முயல்வார்களேயானால், இருவரின் கொள்கையால் சோவியத் ரஷ்யா போல் இந்திய மாநிலங்களும் பல நாடுகளாக பிரியும் அபாயம் இருக்கிறது. இலங்கையிலே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது போல், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் நிலை ஏற்படும். இவ்வாறு கூறினார்.

Tags : CM ,Union government ,KKA ,Stalin ,EVKS Yelangovan , Evks elagovan, mkstalin
× RELATED கோவை மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவு